வடக்கு கிழக்கை மீட்க வேண்டுமெனில் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்-உறவுகள் கோரிக்கை

வடக்கு கிழக்கை மீட்க வேண்டுமெனில் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்-உறவுகள் கோரிக்கை

தமிழர்களை ஒற்றை ஆட்சிக்குள் முடக்க எத்தனிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து,தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கி தமிழ் தேசத்தை மீட்பதற்கு அனைத்து உறுவுகளும் முன்வரவேண்டும் என மட்டகளப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் இணைப்பாளர் திருமதி மதனா பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளர்.

அந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஓ.எம்.பி. அலுவலகத்தை வட,கிழக்கில் நிறுவி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கி அரசை காப்பாற்ற கூட்டமைப்பின் சுமந்திரன், சிறிதரன் போன்ற துரோகிகளால் பாராளமன்றில் கோரப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது
அவ்வாறான அலுவலகத்தில் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பதிவு செய்யவேண்டிய நிலைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

ஐநா வில் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கி, மூன்று தடவை இலங்கை அரசை தப்பவைப்பதற்கு கால அவகாசம் வழங்கி மைத்திரி,ரணில் அரசுக்கு முண்டு கொடுத்து, கோத்தா அரசை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு. எனவே இவர்களை இனியும் தமிழ் இனம் நம்பினால் தமிழரின் தேசம் ஒற்றை ஆட்சிக்குள் முடக்கப்பட்டு, வடக்கு கிழக்கு என்ற தமிழரின் பூர்வீக தேசம் முற்றாக சிங்கள மயமாக்கப்படும்.

1. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும்.

2. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவின் இணைந்த வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசம் என்பதனையும் அதன் தனித்துவமான இறைமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய சமஸ்டித் தீர்வை பெற்றுத்தருவதனை உறுதிசெய்ய வேண்டும்.

3. தமிழ்த் தேசத்தின் மீது இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் ஓர் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிதி நேரடியாகக் கிடைப்பதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

5. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.

6. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

8. சிறீலங்கா ஆயுதப்படைகள் மீதான போர்க்குற்றம், இனவழிப்புக் குற்றம் தொடபான விசாரணைகள் முடியும் வரையில் – சிறீலங்கா இராணுவம் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.

9. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன்னர் இருந்ததுபோல தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

10. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

11. வடக்கிற்கு மகாவலியை திசை திருப்புதல் என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இயங்குவதால் அச்சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.

12. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

13. தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ்கள் (வர்த்தமானி அறிவித்தல்கள்) இரத்துச் செய்யப்படல் வேண்டும்.

14. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும்.

15. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

போன்ற விடயங்களை
முன்வைத்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளித்து தமிழ் தேசியத்தை மீட்பதற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்கவேண்டு

அத்துடன் பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும்.
அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ இலங்கை விசாரிக்கப்படவேண்டும்.

அந்தவகையில் -இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைப்பதற்கு – இலங்கை அரசாங்கத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபையூடாக விசாரிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆணையை வழங்கி எமது தேசத்தை மீட்பதற்கும், காணாமல் ஆக்கட்டவர்களை கண்டு பிடிப்பதற்கும், சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணைக்கு வலுச்சேர்ப்பதற்கும், அனைவரும் முன் வரவேண்டும். என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.