சுமந்திரன் இராஜினாமா கடிதத்தை எழுதி முடித்துவிட்டாரா? அமெரிக்காவில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி

அமெரிக்க தூதுவராலயத்தில் இருந்து ஒரு பிரதிநிதி என்னுடன் பேசுகையில் நகைச்சுவையாக கேட்டிருந்தார் சுமந்திரன் தனது இராஜினாமா கடிதத்தினை எழுதி முடித்துவிட்டாரா என்று . அவர் எழுதிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன் என எனது பதிலை வழங்கியிருந்தேன்.

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார இறுதிப் பரப்புரைக்கூட்டம் இன்று கல்வியங்காட்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு

தமிழ் மக்களுடைய நலன்களைக் காப்பார்கள், எதிர்காலத்தை திட்டமிட்டு செப்பனிடுவார்கள் என்று பல்வேறுபட்ட உறுதிமொழிகளை கொடுத்த பின்னர் தான் நாங்கள் அவர்களை நம்பி வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பினோம்.

ஆனால் எமது பிரதிநிதிகள் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றினால் போதும் என்ற ஒரு அடிப்படையிலும் தமது நலன்களை பாதுகாப்பதையுமே இன்று முதன்மையாக கொண்டுள்ளார்கள்.

கடந்த அரசாங்கத்தில் நாங்கள் கொண்டுவந்த ஜனாதிபதி எமது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று சம்பந்தன் ஐயா கூறிவந்தார்.

ஆனால் எதையும் சாதித்ததாக இல்லை. இன்று பத்திரிகையில் தெரிவிக்கின்றார் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவோம் என்று.

அரசமைப்பு தீபாவளிக்கு வருகின்றது, பொங்கலுக்கு வருகின்றது என்று மாறி மாறி எங்களை ஏமாற்றி கொண்டு இருந்த நிலையில் இன்று எந்த ஒரு அரசமைப்பும் வரவுமில்லை தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட இல்லாத நிலையில் தான் இருக்கின்றார்கள். ஆனால் தங்களை இன்னொரு முறை பாராளுமன்றம் அனுப்புங்கள் என்று வாக்கு கேட்டு வருகின்றார்கள்.

சம்பந்தன் ஐயா கொழும்பில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன், அடுத்த ஆட்சியாளர்களுடன் நம்பிக்கையுடன் பேசுவோம், நிரந்தர அரசியல் தீர்வுக்காக புதிய ஆரம்பம் அவசியமாகிறது, எமது கட்சியுடன் விக்னேஸ்வரனை ஒப்பிட முடியாது, அமைச்சுப் பதவிகளை பெறுவதில் தீர்மானமில்லை என்ற விடயங்களை குறிப்பிடுகின்றார்.

நான் ஒரு விடயத்தை சம்பந்தன் ஐயாவிடம் கேட்க விரும்புகின்றேன். அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறுகின்றீர்கள். ஆனால் எதையும் நிறைவேற்றியதாக தெரியவில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பை கைவிட்டார், சமஷ்டி அரசமைப்பு முறை என்பதை கைவிட்டுவிட்டார், பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொண்டார். இவை அனைத்தையும் கைவிட்டுவிட்டுத்தான் புதிய அரசியல் சாசன வரைவை எழுதினார்கள்.

ஆகவே, அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதை பற்றி கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

அடுத்த ஆட்சியாளர்களுடன் நம்பிக்கையுடன் பேசுவோம் என்கின்றார் சம்பந்தன். அதேசமயம் சுமந்திரன் கூறுகின்றார் மகிந்த ராஜபக்ஷவுக்கு கன்னத்தில் அறைந்ததுபோல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று. சம்பதனுக்கும் அவரது பேச்சாளரான சுமந்திரனுக்கும் இடையிலேயே முரண்பாடு அதிகம். இவர்கள் தான் எங்களுக்காக அரசாங்கத்துடன் பேசப்போகின்றோம் என்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல சம்பந்தன் கூறுகின்றார் நாங்கள் அமைச்சுப் பதவிகளை பெறுவதில் தீர்மானம் இல்லை, சிலசமயங்களில் எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்கக் கூடும். சுமந்திரன் தங்களை வலுவான ஒரு அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கு என்று கூறுகின்றார்.

இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பேசுவதாக கூறிக்கொண்டிருந்தீர்கள். இல்லா விட்டால் மக்களை ஏமாற்றி அரசாங்கத்துடன் கள்ள உறவுகளை பேணிக்கொண்டிருந்தீர்களா என்பது தான் எனது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது?

சுமந்திரன் கூறினார் புதிய அரசியல் சாசனம் வராவிட்டால் அதற்கான பொறுப்பை ஏற்று நான் இராஜினாமா செய்துவிடுவேன். அதன்பிற்பாடு நாடாளுமன்றில் இருக்க மாட்டேன். புதிய அரசியல் யாப்பு வந்தால் அதற்கு பின்னர் அரசியலில் எந்த தேவையும் இல்லை.

ஆகவே அவர் புதிய அரசியல் யாப்பு கொண்டு வருவதற்காகதான் வந்ததாகவும் வராவிட்டால் அதற்கான முழு பொறுப்யையும் ஏற்று தான் விலகி விடுவேன் என்று கூறினார். அது மாத்திரமல்ல தனது இராஜினாமா கடிதத்தின் அரை வாசியை எழுதி முடித்து விட்டேன் என்று கூட கூறினார்.

தள்ளாத வயதில் நாடாளுமன்றம் போவதற்காக வந்திருக்கக் கூடிய விக்னேஸ்வரனை தோற்கடியுங்கள் என்று சுமந்திரன் பேசியிருக்கின்றார். நான் ஒன்றை சுமந்திரனிடம் கேட்க விரும்புகின்றேன் சம்பந்தன் ஐயாவால் இருந்தால் எழுந்திருக்க முடியாது, காது சரியாக கேட்காது இவ்வாறு அவரால் எதுவுமே முடியாத ஒரு சூழ்நிலையில் சம்பந்தன் ஐயா போட்டியிடுவது கண்ணுக்கு தெரியவில்லையா? மாவைக்கு வயது 77 அவர் என்ன பேசுகிறார் என்ன செய்கின்றார் என்பதே அவருக்கு தெரியாது? ஆனால் அவர் போட்டியிடுகின்றார். இவர்கள் வயதானவர்கள் இல்லையா?

நவக்கிரகங்கள் போல தமிழரசுக் கட்சியில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் நேருக்கு நேரே பார்த்து பேசிக் கொள்வதே கிடையாது.

எனவே, நாம் சரியான தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். நமது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழன் எமது மண்ணில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். சர்வதேச நீதிமன்றின் மூலம் சரியான ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எமது இந்த கூட்டணி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையின் கீழ் இன்று பேட்டியிடுகின்றோம் – என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா, அருந்தவபாலன், சிவகுமார், சிற்பரன், மீரா அருள்நேசன், அனந்தி சசிதரன் ஆகிய வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.