வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் “கொரோனா வைரஸ் வெடிகுண்டுகள்”

Coronavirus Disease 2019 Graphic. (U.S. Air Force Graphic by Rosario "Charo" Gutierrez)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள உழைக்கும் மக்களை அழைத்துவருவதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்ணிய செலவாணியை பெற்றுக் கொடுக்கும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் எம்நாட்டு மக்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது.

இந்நாட்டை சேர்ந்த 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர். அவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இருக்கின்றது.

ஆனால் எம்.பிக்களின் பிள்ளைகளையும் , அவர்களின் சகாக்களின் பிள்ளைகளையும் அழைத்து வருவதற்கு மாத்திரம் விசேட விமானங்கள் அனுப்பட்டுள்ளன.

இது பெரும் கவலைக்குறிய விடயமாகும்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்களை ஆளும் தரப்பினர் “கொரோனா வைரஸ் வெடிகுண்டுகள்” என்றும் குறிப்பிட்டருந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்நாட்டைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமானபேர் தங்களை நாட்டுக்கு அழைத்து செல்லுமாறு தூதரங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டில் இருக்கும் நபர்களில் 2000 பேருக்கு கொரோனா வரைஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் , 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உடனடியாக அவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.