தீவிரவாத தாக்குதலுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் உள்ள தொடர்பை விரைவில் அம்பலப்படுத்துவேன்! சவால் விடுத்துள்ள பிரமுகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில முக்கிய தகவல்களை இன்னும் சில தினங்களில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் ஒரு திட்டமிட்ட கொலை என்பதை தான் ஆதாரபூர்வாக நிரூபித்து காட்டுவதாகவும் சவால் விடுத்த அவர், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத் தாக்குதலுக்கும், ராஜபக்ச குடும்பத்துக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் பதுளையில் நேற்றைய தினம் மாலை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதையும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்மால் வழமையை போன்று சுவாசிக்க கூட முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் அவசியம் தானா? எமக்கு விருப்பமில்லாவிட்டாலும், ராஜபக்சக்கள் என்ற குடும்பத்தினருக்காக நாங்கள் இதனை செய்யவேண்டியுள்ளது. அவர்களது பலத்தை பாதுகாத்துக் கொள்ளவே இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த முறையில் செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே அவர் தோல்வியடைவதற்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஒரு காரணமாக இருந்தன. இது உண்மையாகவே திட்டமிட்ட கொலையாகும். ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவும் சஜித்தை தோல்வியடையச் செய்வதற்காகவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே இந்த தாக்குதல்.

எம்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு கத்தோலிக்க மக்களை கொலைச் செய்ய வேண்டும் என்ற தேவை எப்போதும் இருக்கவில்லை. இந்த தாக்குதல் தொடர்பில் உண்மைத் தகவலை நான் நாட்டுக்கு தெரியப்படுத்துவேன். இது தொடர்பில் எனக்கு சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களில் அதனை நான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவேன்.

அதற்கு பின்னர் என்னையும் மறைந்த அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியை போன்று வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சிப்பார்களோ தெரியவில்லை. அவ்வாறு நான் உயிரிழந்தாலும் ஆத்மாவாக வந்து ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பேன்.

மொணராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது சகாக்களை பாதுகாப்பதற்காக இனவாதத்தை முன்னிலை படுத்தியுள்ளார். இவர்கள் மொணராகலையில் சிங்கள மக்கள் முன்னிலையில் இவ்வாறு கூறும் இவர், முஸ்லீம் மக்கள் முன்னிலையில் கிரேண்பாசில் உங்களை தாக்கிய போது நான்தான் உங்களை காப்பாற்றினேன் என்று கூறுவார்.

மஹிந்த ராஜபக்ச இரு முறை ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்தவர். தற்போதும் பிரதமராகவே பதவி வகிக்கின்றார். தொடர்ந்தும் அவர் வந்து என்ன செய்யப்போகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.