போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பொலிசாருக்கு மரணதண்டனை வழங்கப்படும்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை, வர்த்தகர்களிற்கே மீள விற்பனை செய்யப்பட்ட விவகாரததில் கைதான, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
“1979 முதல் இலங்கையில் மரண தண்டனை செயல்படுத்தப்படவில்லை, ஆனால் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் கைதான பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்“ என அஜித் ரோஹானா கூறினார்.
இன்று (10) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் மூலம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை நியமிக்க சட்டமா அதிபர் மூலம் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தொடர்பாக 18 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 3 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கைதான பொலிஸ் அதிகாரிகளிற்கு சொந்தமான 11 வாகனங்கள் மற்றும் 18 நிலங்களை சிஐடி கையகப்படுத்தியுள்ளது.