சிறிதரனுக்கு சரியான பாடம் புகட்டுவோம்-தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர்!

முன்னாள் எம்.பி சி.சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் காண்பித்துள்ளது என்று தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்தார்.

 ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘சிறிதரன் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் அரசியலுக்குள் நுழைந்தபோது தமிழ் பெண்கள் அனைவரும் அவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவமாகவே பார்த்தார்கள். ஆனால் இன்று அவரின் நிலை தலைகீழாக மாறியதையிட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

சிறிதரன் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மேற்கொண்டு வரும் ஒப்பீட்டு அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் காண்பித்துள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தகமையற்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்ச்சிக்கும் தகுதி சிறிதரனுக்கு இல்லை. விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் விதமாக செயற்பட ஆரம்பித்திருக்கும் அவருக்கு தேர்தலில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத்மாத்தமாக நேசிக்கும் தமிழ் பெண்கள் அனைவரும் நிச்சயம் சரியான பாடம் புகட்டுவார்கள்’ – என்றார்.