நுவரேலியாவில் களம் இறங்கும் ஜீவன் தொண்டமான்!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவையடுத்து ,பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவிருந்த நுவரெலியா மாவட்டத்தில் அவருக்குப் பதிலாக களமிறங்குகிறார் அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான்.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ தொ கா தூதுக்குழு கட்சியின் இந்த முடிவை தெரிவித்தது.தேர்தலில் போட்டியிடும் ஒருவர் உயிரிழந்தால் அவரின் இடத்திற்கு மூன்று நாட்களுக்குள் ஒருவரை நியமிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இ தொ கா போட்டியிடுவதால் முறைப்படி பெரமுனவின் செயலர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார்.

ஜீவன் தொண்டமானை நுவரெலியாவில் களமிறக்கவுள்ள இ தொ கா ,கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து பின்னர் ஆராயுமென சொல்லப்பட்டது.இன்றைய சந்திப்பு தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு;

மறைந்த அமைச்சர் ஆறுமுகம்; தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (27.05.2020) பிரதமரை சந்தித்தனர். இதன்போது, இந்த தீர்மானத்தை கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் முன்வைத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகம்; தொண்டமான் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க அனுமதிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வைக்க கட்சி எடுத்த இந்த முடிவை இதன்போது பிரதமர் பாராட்டினார். அத்தோடு, இக்கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமருடனான இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு உறுப்பினர்களான டி.மதியோகராஜா, எம்.ராமேஸ்வரன், ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கே.கனகராஜ், எல்.பாராதிதாசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.