அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரும், தொழிற் சங்கவாதியுமான ஆறுமுகம் தொண்டமான் சற்று முன்னர் காலமானார். இன்று மாலை ஏற்பட்ட திடீர்ச் சுகவீனத்தையடுத்து தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரவு 9.00 மணியளவில் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1964 மே 29 ஆம் திகதி பிறந்த அவர் 56 வயதைப் பூர்த்தி செய்வதற்கு 3 நாட்கள் இருந்த நிலையில் காலமானார். கடந்த சுமார் 20 வருடகாலமாக பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

இன்று காலை தனது அமைச்சுக்குச் சென்ற அவர் பின்னர் இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவையும் அவர் சந்தித்தார்.

இந்தப் பேச்சுக்களின் பின்னர் பாராளுமன்ற பகுதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற அவர் மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.