மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்!

மலேசியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களில் செயல்படும் குடிநுழைவு தடுப்புமையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மத்தியில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே கடந்த சில தினங்களாக புதிதாக அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

எனினும் நோய்த்தொற்று உள்ளவர்கள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், நோயில் இருந்து குணமடைந்ததும் பாதுகாப்பான சூழலில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் நூர்ஹிஷாம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள இத்தகைய தடுப்பு மையங்களில் மூன்றில் மட்டுமே கிருமித்தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இம்மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் இதுவரை 227 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 41 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மேலும் இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தோனீஷியா, மியான்மர், பாகிஸ்தான், சீனா, கம்போடியா உள்ளிட்டநாடுகளைச்சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இன்றைய நிலவரம்:

மலேசியாவில் இன்று புதிதாக 172 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக புதிதாக நோய்த் தொற்றியோர் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களிலேயே இருந்து வந்த நிலையில், மீண்டும் கோவிட்-19 நோய்க்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை தொட்டுள்ளது.

இதன் மூலம் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,417ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.