தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணை.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில், மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் மூலம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விசாரணையின்படி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்த தனது மகனையும், தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட மகளையும் அழைத்துக் கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இரண்டு நாட்கள் சென்றமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் கடமைக்காக கொழும்பு செல்வதாக குறிப்பிட்டு, கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கப் ரக வாகனமொன்றை பெற்றுக்கொண்டு, தனது மகனையும் அழைத்துக் கொண்டு கொழும்பு சென்றுள்ளார்.

பொரளையிலுள்ள தனது வீட்டில் அன்றிரவு தங்கியிருந்த அவர், 18ஆம் திகதி மகனையும் அழைத்துக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவகத்திற்கு சென்றார்.

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட மகளையும் அழைத்துக் கொண்டு 19ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

14 நாள் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படும்போது, அடுத்த 14 நாட்கள் கட்டாயம் வீடுகளில் சுயதனிமைப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டே விடுவிக்கப்படுகிறார்கள். அதை மீறியே மகளை அழைத்துக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றார். சில மனி நேரம் தங்கிச் சென்றுள்ளார்.

மறுநாளும் இரண்டு பிள்ளைகளுடன் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

கூழின் மகளை அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். அவர் அதை பொருட்படுத்தவில்லை. இறுதியில், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு, கூழை அங்கிருந்து அகற்றியதுடன், கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்தார்.

அன்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

ரட்னஜீவன் கூழ் அனுமதிப்பத்திரமின்றி நடமாட அனுமதியுள்ள போதும், கூழின் பிள்ளைகளிற்கு அவ்வாறான அனுமதியில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து மகனை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் அழைத்து வந்தது பெரும் விதிமீறலாக கருதப்படுகிறது.

கூழின் வாகனச்சாரதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெண் வரவேற்பாளர், தேர்தல்கள் ஆணைக்குழு உயரதிகாரியொருவரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

விசாரணை முடிந்ததும், அதன் அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் சட்டப்பிரிவிற்கு அனுப்பப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.