தமிழகத்தில் பத்தாயிரத்தை தாண்டியது கொரோனாத்தொற்று!

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 385 பேர். மாலத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கர்நாடகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இந்நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 385 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 309 பேர். இதன் மூலம், சென்னையில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,946ஆக உயர்ந்துள்ளது..

மேலும், செங்கல்பட்டில் 20 பேரும், காஞ்சிபுரத்தில் 11 பேரும் மதுரையில் 6 பேரும் திருவள்ளூரில் 21 பேரும் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,599ஆக உள்ளது.

தற்போது கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

தற்போது தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 7,435ஆக உள்ளது. இன்று 11,672 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 3,03,104 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.