சேமித்த 25,000 ரூபாய் பணத்தில் நிவாரண பொருட்களை வழங்கிய 9 வயது சிறுமி!

சேமித்த 25,000 ரூபாய் பணத்தில் நிவாரண பொருட்களை வழங்கிய 9 வயது சிறுமி புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் வெள்ளையன் .இவருடைய மனைவி வித்யா. வீட்டிலேயே தையல் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு தியா என்று 9 வயதில் மகள் இருக்கிறார். புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது படிப்பிற்காக மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நோக்கத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறு, சிறு தொகையை தியா கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சேமித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழிலாளர்களின் குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதைச் செய்திகள் மற்றும் உறவினர்கள் மூலம் தியா தெரிந்துகொண்டார். இதனையடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை தந்தையிடம் தியா தெரிவித்தார். இதனால் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தியா உண்டியலில் சேமித்து வைத்த ரூ.24,347 பணத்தை பயன்படுத்த வெள்ளையன் முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து, வேலையின்றி தவித்த கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பிறமாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், திருமண மண்டபங்களில் துப்புரவு பணி செய்துவரும் பணியாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரைத் தேர்வு செய்து அவர்களது குடும்பத்திற்குத் தேவையான உணவு பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் சிறுமி தியா மற்றும் அவரது பெற்றோரை அழைத்துப் பாராட்டினார். சிறுமி தியாவின் உதவும் மனபான்பையை மேலும் பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் தியாவை அவரது இருக்கையில் அமர வைத்தார்.

                                                                                                                                  பிரதி பிபிசி செய்தி