சிங்கப்பூரில் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!

சிங்கப்பூரில் இன்று புதிதாக 793 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அங்கு ஒரே நாளில் 1,164 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 

அண்மைய சில தினங்களாக சிங்கப்பூரில் அன்றாடம் புதிதாக வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கையைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று பதிவான நோய்த்தொற்று சம்பவங்களை அடுத்து அங்கு வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,891ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

 

இதற்கிடையே சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சில புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அங்கு நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியது முதல் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி வருவதாக சிங்கப்பூர் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

 

மே மாதம் 6ம் தேதியுடன் முடிவடைந்த ஒருமாத காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 476 புகார்களைப் பெற்றதாகவும், இது வழக்கத்தைவிட ஒப்பீட்டளவில் 22 விழுக்காடு அதிகம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. “காயம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபடுவது, தாக்குதல் நடத்துவது, தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக மிரட்டுவது ஆகியவற்றுடன் தவறாக ஒருவரை அடைத்து வைப்பது போன்றவை தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது,” என அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.