அத்தியாவசிய சேவைகள் என்ற துடுப்பிரசுரத்துடன் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

அத்தியாவசிய சேவை எனும் துண்டுக் குறிப்புடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் கடத்திச் செல்லும் நோக்கில், 5, 10 கிலோ அரிசி உரைகளில் சூட்சுமமாக மறைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த  சுமார் 271 கோடி ரூபா பெறுமதியான  225 கிலோ 969 கிராம் நிறைக் கொண்ட ஹெரோயின் போதைப் பொருளினை பொலிஸ்போதைப் பொருள்  தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள்  தடுப்புப்  பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்தவுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்  ஒன்றுக்கு அமைய, நேற்று நள்ளிரவில்  நுக கஹவத்த வீதி, வெலிசறை, ராகமை எனும் முகவரியில் உள்ள  கட்டிடம் ஒன்றினை சுற்றிவளைத்த போது இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன்போது நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்ததாகவும், பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். 24,30,50 மற்றும் 55 வயதுகளை உடைய வெலிசறை, ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும், இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு  அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சந்தேக நபர்களிடம் பொலிஸ்போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த,  பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மஞ்சுள சேனாரத்ன  ஆகியோரின் நேரடி கட்டுப்பாடு மற்றும் ஆலோசனைகலுக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான சிறப்புக் குழுவினரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள  விசாரணைகளின் படி, போதைப்பொருள்  கடத்தல் மற்றும் பல்வேறு திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள கொஸ்கொட தாரக எனும் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் தலைவனே சிறையிலிருந்து இந்த கடத்தலை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி,  இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளோர், பண முதலீடு செய்தோர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக  பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த  தகவல் தருகையில்,

‘ உண்மையில் தற்போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் ஊடாக போதைப்பொருள் நாட்டுக்குள் வரவாய்ப்பில்லை. எனினும் தென்கடல் பரப்பூடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு நாடு முழுதும் கடத்தப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 அதன் பிரகாரம் ஈரான், ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட ஹெரோயினே இவ்வாறு நாம் தற்போது கைப்பற்றப்பட்ட பொதிகளில் உள்ளவை என நாம் நம்புகின்றோம். இதற்கான சான்றுகள் உள்ளன.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஹெரோயின், அழகாக ஊதா நிறத்தை ஒத்த பானவகை குறித்த பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு பெக்கட்டின் சுமார்  ஒரு கிலோ 137 கிராம் வரை உள்ளன. அவ்வாறு அடைக்கப்பட்ட 200 பக்கட்டுக்கள் நேற்று மீட்கப்பட்ட  போதைப்பொருள் தொகையில் உள்ளன.

 பின்னர் அந்த போதைப் பொருள் பக்கட்டுக்களை மிக சூட்சுமமாக, 5,10 கிலோ அரிசி உரைகளில்  மறைத்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த அரிசியில் மறைக்கப்பட்ட ஹெரோயினை பொதி செய்து, அத்தியாவசிய சேவைகள் எனும்  துண்டுக் குறிப்புடன் நாடளாவிய ரீதியில்  பல பகுதிகளுக்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 நாட்டில் கொரோனா நிலைமை காரணமாக  ஊரடங்கு  நிலைமை கடந்த காலத்தில் இருந்ததால் பல துறைகளின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.

எனினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களது நடவடிக்கைகளை அதன் போதும் எந்த சிக்கலும் இன்றி முன்னெடுத்துச் சென்றுள்ளமை இந்த கைதுகள் ஊடாக தெரியவந்துள்ளது.  நாம் சற்று தாமதமாக அந்த இடத்துக்கு சென்றிருந்தால் கூட அத்தியாவசிய சேவைகள் என்ற துண்டுக் குறிப்புடன் அங்கிருந்து ஹெரோயின் கடத்தப்பட்டிருக்கும் என்றார்.

குறித்த கட்டிடத்திலிருந்து, நாட்டின் பல பகுதிகளுக்கு  இந்த ஹெரோயின் தொகையை கடத்திச் செல்ல,  சொகுசு காரும், கெப் வண்டியும்  தயார்  நிலையில் இருந்த நிலையில் அவையும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால்  தமது பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு அரிசி உரையிலும் போதைப்பொருள் பக்கட்  சூட்சுமமாக மறைக்கப்பட்ட பின்னரும் அரிசி உரையின் நிறை, வடிவம் உள்ளிட்ட எவையும் மாறா வண்ணமும், எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணமும் மீள அவ்வுரைகள்  தைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் தொகையே இலங்கையில் நிலப்பரப்பில் மீட்கப்பட்ட 2 ஆவது அதிகூடிய ஹெரோயின் தொகையாகும் என பொலிஸார் கூறினர். இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன