இனவழிப்பு நாளை நினைவுகூர அறைகூவல்..!யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

தமிழர் இனவழிப்பு நாளான மே-18 ஆம் திகதி திங்கட்கிழமை சில விடயங்களைக் கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறைகூவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,     

மே-18 அன்று இரவு-07 மணிக்கு எமது வீட்டு முன்றல்களிலும், பொதுவிடங்களிலும் சுடரேற்றி அஞ்சலிப்போம், அதேநேரத்தில் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் மணியொலி எழுப்பி முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், தமிழினப்  படுகொலையையும் நினைவு கூர்வோம், போரின் இறுதி நாட்களில் எமது மக்களின் ஒரே உணவாய் அமைந்த உப்புக் கஞ்சியை எமது இல்லங்களில் ஒருநேர உணவாக்கி நினைவுகளின் நீட்சிக்கு வழி கோலுவோம், அன்றைய நாளில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பொதுவிடங்களில் வழங்கி மக்களை நினைவுகூரலுக்கு அழைப்போம், எமது எதிர்கால சந்ததிக்கு எம்மினம் சார்ந்த பேரவலங்களை எடுத்துச் சொல்லி அவர்களையும் இனப் படுகொலையின் சாட்சிகளாக்குவோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டு இந் நினைவு  நாள் கோவிட்-19 எனும் உலகப்  பெருந்தொற்று நோயின் பின்னணியில் வருவதனால் பகிரங்கமாகப் பெருந்தொகையில் அணிதிரண்டு எமது அபிலாஷைகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக் கைதிகளாக நாம் மாற்றப்பட்டுள்ளோம்.

இந் நிலையில் எமது நினைவு கூரலை, உணர்வெழுச்சியை ஆழமானதாகவும், ஆத்மார்த்தமாகவும் அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.