விளையாட்டுக்காக யாரும் ஆயுதம் எந்தவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் எந்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சகோதர மொழி ஊடகம் ஒன்றில் எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இலங்கை தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் தானும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஏனையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
உண்மையில் இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒவ்வாத கருத்தாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் உட்பட நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.
சுதந்திரத்துக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெற்ற நாள் முதல் தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 30 ஆண்டு காலமாக ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியிலேயே போராடி வந்தது. குறிப்பாக தனி சிங்கள சட்டம், பௌத்தம் அரச மதம், பிரஜா உரிமை சட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் சிறுபான்மையோருக்கு நேர்ந்த அநீதிகள் என தமிழர்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்ட போதெல்லாம் தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அகிம்சை ரீதியான போராட்டங்களையே முன்னெடுத்தது.
ஆனால் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை அரசாங்கமானது ஓர் நியாயமான தீர்வினை வழங்காமல் மேலும் மேலும் தமிழர்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்க முற்பட்டபோதே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உண்மையில் தமிழர்களின் அகிம்சை போராட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமானது செவிசாய்த்திருந்தால், ஆயுத அமைப்புகள் தோன்றியும் இருக்காது.
எனவே தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்கு முறைகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுத ஏந்தினார்களே தவிர பொழுது போக்குக்காகவோ விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ ஆயுதம் எந்தவில்லை. இதை தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொரு குடிமகனும் விளங்கிக் கொள்வார்கள் என தெரிவித்தார்.