கொரோனா போராளிகள் கெளரவிக்க நீலநிறத்தில் மிளிரும் சிங்கப்பூர் கட்டடங்கள்

சிங்கப்பூரில் இன்று புதிதாக 753 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை 22,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக 230 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒர்க் பெர்மிட்டில் இருப்பவர்கள் பணியிடத்திலும் தங்குமிடத்திலும் விதிமுறைகளை மீறியதற்காகவும் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை மீறியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இத்தகவலை சிங்கப்பூர் மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து அந்நியத் தொழிலாளர்களை அவ்வப்போது கைபேசி காணொளி வசதி மூலம் மனிதவள அமைச்சு அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். மேலும் தங்கு விடுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் விதிமுறைகளை மீறியோர் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21 பேரின் வேலை பர்மிட் ரத்து செய்யப்பட்டதுடன் அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னிலை ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக சிங்கப்பூர் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நாட்டிலுள்ள சில முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் மிளிரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், உணவு விநியோக ஊழியர்கள் ஆகியோரின் உழைப்பைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளதாக சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து ஸீ இட் ப்ளூ (See It Blue) என்ற இயக்கத்தை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த இயக்கமானது இங்கிலாந்தில் தொடங்கி பின்னர் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. மனநல விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருவதாகவும், இனி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிங்கப்பூரின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் மிளிரும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.