எரிபொருள் நிவாரணம் இல்லையேல் தனியார் பேருந்துகள் ஓடாது!

அரசாங்கம் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்காது போனால் எதிர்வரும் 11 ஆம் திகதி தனியார் பேருந்துகளை சேவைக்கு உட்படுத்த மாட்டோம் என இலங்கை தனியார் போக்குவரத்து  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் பகுதிகளில் மற்றும் மேல் மாகணத்தில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் தனியார் பேருந்துகளை உட்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கெமுனு விஜயரத்ன இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 11 ஆம் திகதி பேருந்துகளை பயன்படுதுவதானால் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். பேருந்துகளில் குறைந்த அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அரசாங்கம் பிறப்பித்துள்ள நிலையில் குறைந்த பயணிகளுடன் பேருந்துகளை நடத்த முடியாது. ஆகவே 50 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அரச தரப்பிடம் முன்வைத்துள்ளோம். எனினும் இப்போது வரையில் அதற்கான பதில் எதுவும் அரச தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

ஆகவே எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். அரசாங்கம் மக்களுக்காக இதனை செய்ய வேண்டும். அவ்வாறு எமக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கினால் நாம் பேருந்துகளை போக்குவரத்து சேவையில் பயன்படுத்துவோம். இல்லையேல் நாம் பேருந்துகளை போக்குவரத்து சேவைகளில் உட்படுத்த மாட்டோம் என்றார்.