இந்திய இரசாயன ஆலையில் விச வாயு கசிவு: 5 பேர் பலி; 1000 பேர் பாதிப்பு!

ஆந்திராவில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கிருந்து இன்று (07) அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இது, அங்கிருந்து 3 கிலோமீற்றர் தூரத்திற்கு பரவியது. இதனால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீதிகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.
இவ்வாறு ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குழந்தை உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.