முள்ளியவளைப்பகுதியில் எரியூட்டப்பட்ட சடலங்கள்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைபடுத்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் (01) உயிரிழந்த கொழும்பு குணசிங்கபுரவை சேர்ந்த இரண்டு முதியவர்களினதும் சடலம் நேற்று 02)இரவு முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யபட்ட முதியவர் ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச இளைஞர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டு நீண்ட இடைவெளியின் பின்னர் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம் செய்ய முள்ளியவளை பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த மற்றைய முதியவரின் மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு கொரோனா தொற்று உறுதி செய்வதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்றமையால் நீதிமன்ற உத்தரவை பெற்று உயிரிழந்த மற்றைய முதியவரின் சடலமும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது பொலிஸார் ,இராணுவம் ,சுகாதார வைத்திய அதிகாரி , சுகாதார பரிசோதகர்கள் கிராம அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் சடலங்கள் இரவு 11.30 மணியளவில் தகனம் செய்யபட்டன.
உயிரிழந்த இருவரும் கொழும்பில் யாசகம் பெற்று வாழ்க்கை நாடாத்தி வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.