நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை!

நாடு எதிர்கொண்டுள்ள ஸ்திரமற்ற நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அண்மையில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு, அரசியல் தீர்மானங்களினால் வீணாகி போகக்கூடாது என அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியம் கிடையாது என நியாயமாக தீர்மானிக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.ஏனைய நாடுகளை போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்ற தனித்துவமான மூன்று அதிகாரங்களை கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகின்றது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநாட்டுவதற்கு இந்த மூன்று துறைகளும் இன்றியமையாதது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு இதற்கு முன்னர் சந்திக்காத சவாலொன்றை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில், குறித்த மூன்று துறைகளினதும் செயற்பாடுகள் ஏனைய சந்தர்ப்பங்களை விடவும் தற்போது அத்தியாவசியமானவை என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி அரசியலமைப்பின் 70(7) உறுப்புரிமையின் பிரகாரம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.