சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் பரவக்கூடும்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதுள்ள சூழ்நிலையில், கொரோனா நோயாளிகளுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்புகள் ஏற்படுவது தொடருமானால் சமூகத்திற்குள் நோய் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

அதேபோன்று, நாரஹன்பிட்டியவில் உள்ள முகாந்திரம் ஈடி டாபரே மாவத்தையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தைக்கு சென்ற டொறிங்டன் பிளேசை சேர்ந்த ஒருவரை அடையாளம் கண்டுள்ளோம், அவரிற்கு நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கின்றோம்.

கொழும்பு மாநகரசபை ஊழியர் ஒருவரிற்கும் வைரஸ் பாதிப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபருக்கு சொந்தமான லொறியின் சாரதி பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நோயாளிகளுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்புகள் ஏற்படுவது தொடருமானால் அதனால் சமூகத்திற்குள் நோய் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.