கொரோனா வைரஸ் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா!

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய தனிப்பட்ட சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அந்நாடு கூறுகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சீனாவின் கவனத்தை இது திசைத்திருப்பும் என்றும் இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பிரிட்டனுக்கான சீனாவின் துணை தூதர் சென் வென் பிபிசியிடம் தெரிவித்தார்.

கோவிட் 19 தொற்று எங்கிருந்து தோன்றியது, முதலில் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த தகவல் தெளிவாக கிடைத்தால், இத்தொற்றை கையாள உலக நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்ற விவாதம் இருக்கிறது.

கடந்த ஆண்டு சீனாவின் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு இறைச்சி சந்தையில்தான் முதன்முதலில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தொற்று குறித்து சீனா தவறான தகவலை பரப்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அருகில் உள்ள நாடுகளை குறிவைத்து நடத்தப்பட்ட சதி இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், சீனா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

ஆனால், இது வுஹான் ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வைரஸ் என்ற கூற்றுக்கு பல விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான், சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பது குறித்து பேச்சு எழுந்தது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள வருடாந்திர உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

“இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தற்போது நாங்கள் வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வருகிறோம். அதில்தான் எங்கள் கவனம் உள்ளது. விசாரணை குறித்து தற்போது ஏன் பேச வேண்டும்? இதனால் எங்கள் கவனம் திசை திருப்பப்படும். விசாரணையால் எந்த பலனும் இல்லை” என்று சென் வென் கூறியுள்ளார்.