யாழ்குடா உட்பட 18 மாவட்டங்களுக்கு எதிர் வரும் 20 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு!

கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,புத்தளம், கண்டி, கேகாலை ,அம்பாறை மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும்.மறு அறிவித்தல்வரை இந்த மாவட்டங்களில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு மறுநாள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் .

கண்டி , கேகாலை ,அம்பாறை மாவட்டங்களின் அலவத்துகொட ,அக்குறணை ,வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.மேற்படி மூன்று மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் தினந்தோறும் இரவு 8 மணிக்கு அமுலாகும்.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை ,கிராண்ட்பாஸ்,பம்பலப்பிட்டி ,வாழைத்தோட்டம் ,மருதானை கொத்தட்டுவ ,முல்லேரியாவ,வெல்லம்பிட்டி ,கல்கிஸை ,தெஹிவளை ,கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகள் ,

கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, கொச்சிக்கடை ,சீதுவை பொலிஸ் பிரிவுகள் ,

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம்,மாரவில ,வென்னப்புவ பொலிஸ் பிரிவுகள்,

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம ,பயாகல,பேருவளை ,அழுத்கம பொலிஸ் பிரிவுகள் ,

இவை தவிர்ந்த இதர பொலிஸ் பிரிவுகளில் 22 ஆம்திகதி முதல் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும்.

இதன்படி பண்டாரகம ,பயாகல,பேருவளை ,அழுத்கம, புத்தளம்,மாரவில ,வென்னப்புவ ,ஜா எல, கொச்சிக்கடை ,சீதுவை ,கொட்டாஞ்சேனை ,கிராண்ட்பாஸ்,பம்பலப்பிட்டி ,வாழைத்தோட்டம் ,மருதானை ,கொத்தட்டுவ ,முல்லேரியாவ,வெல்லம்பிட்டி ,கல்கிஸை ,தெஹிவளை ,கொஹுவல ,அலவத்துகொட ,அக்குறணை ,வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்

பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் ,பிரத்தியேக வகுப்புகள் சினிமா தியேட்டர்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது.ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுத்தாபனங்கள் ,வங்கிகள் இயங்கவுள்ளன.

கொழும்பு மாவட்டத்திற்குள் அரச நிறுவனங்களில் கடமையாற்றுவோரில் மூன்றில் ஒரு தரப்பினர் கடமைகளுக்காகசமுகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் 50 வீதமான அரச ஊழியர்கள் கடமைகளுக்காக  சமுகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து ஊழியர்களும் தமது வீடுகளில் இருந்தவாறே பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நிறுவனங்களில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய ஊழியர்கள் தொடர்பான தீர்மானத்தை அந்த நிறுவனத்தின் பிரதம அதிகாரி எடுக்க வேண்டும். முதல் தினத்தில் கடமைகளுக்கு அழைக்கப்படுகின்ற மூன்றில் ஒரு தரப்பினர் அல்லது 50 வீதமானோருக்கு பதிலாக அடுத்த நாள் வேறு சிலரை கடமைகளுக்கு அழைப்பதற்கான அதிகாரம் நிறுவனத்தின் பிரதம அதிகாரி வசம் காணப்படுகின்றது.

அலுவலகங்கள் திறக்கப்பட்டு நடத்திச் செல்லப்படும் சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார பிரிவினர் முன்வைக்கும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான வசதிகளை வழங்க வேண்டிய பொறுப்பு நிறுவனத்தின் பிரதம அதிகாரி வசம் காணப்படுகின்றது.

தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு சமுகமளிக்க வேண்டிய ஊழியர்கள் யார் என்பதை நிறுவனத்தின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும். அலுவலகங்கள் திறக்கப்பட்டு நடத்திச் செல்லப்படும் சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார பிரிவினர் முன்வைக்கும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படுகின்ற நிறுவனங்களின் ஊழியர்கள் பயணிப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அரச நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அரச போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்கள் கட்டாயம் கடமைகளுக்க சமுகமளிக்க வேண்டும்.

பஸ்கள், வேன் மற்றும் ரயில் பெட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயணிகள் பயணிக்க முடியும். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்படும். இந்த நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்து அனைத்து சேவைகளையும் ஆரம்பிக்குமாறு தனியார் மற்றும் அரச போக்குவரத்து நிறுவனங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான நிகழ்வுகள், யாத்திரைகள், சுற்றுலா பயணங்கள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியன மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று திரள்வது வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அனைத்து விதமான சமய நிகழ்வுகளையும் கைவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, மரணத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடனேயே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நடைமுறைப்படுத்தப்பட்ட கடும் நடவடிக்கைகளினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழுள்ள அதேபோன்று நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால் வைரஸ் பரவாத விதத்தில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் தொழிலுக்கு செல்வோரை தவிர ஏனையோரை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் அவசரப்பட்டு ஒரே தருணத்தில் அனைவரும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.