காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கும் நிவாரணத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் – எதிர்பார்க்கும் நீதியை வழங்க முடியாத  காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திருமதி மதிஅமுதன் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பாதிப்பை ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவத் தரப்புடன் இணைந்தே தயாரிக்கப்பட்ட  காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட விடயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கக் கூடிய அதிகாரம் எவையும் அதற்கு வழங்கப்படவில்லை. 

வெறுமனே தகவலைத் திரட்டி – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வு வழங்குவது போன்று – ஏமாற்றுவதற்காகவே இந்த காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே – பாதிக்கப்பட்டோருக்கு – மாதாந்த கொடுப்பனவு வழங்குதல் என்னும் கபட திட்டத்தால் –  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரச்சினையை  மூடிமறைக்க – சிறிலங்கா அரசு முயற்சித்தவேளை அதனை நிராகரித்திருந்தோம்.

இந்த நிலையில் – தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் – 19 நோய் தொற்று தொடர்பான இடர்கால நிலையில்- அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி –   வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த – காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக நிவாரணம் வழங்கி  – இந்த அவல நிலையிலும்  அரசியல் இலாபம் தேட அரச தரப்பு முயற்சிக்கின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் – ஏனைய குடும்பங்களை விடவும் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் கிடைப்பது முக்கியமானதாகும். ஏனெனில் – குடும்பங்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களையும் – உழைத்துக் குடுப்பங்களைப் பாதுகாத்தவகர்ளையுமே சிறிலங்கா இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளது. 

இதனால் – அவர்களின் குடும்பங்கள் போதிய வருமானமற்ற நிலையில் – போர் முடிந்தும் – பலவருடங்களாக வறுமையை எதிர்நோக்கிய நிலையிலேயே உள்ளனர். இன்று ஏற்பட்டுள்ள – கொவிட் – 19 நோய்த்தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை – ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை மிகவும் வறுமைநிலைக்குத் தள்ளியுள்ளது.

இந்நிலையில் – அவரகளுக்கு உதவிகள் கிடைக்கவேண்டியது அவசியமானதாகும். ஆனால் – அவர்களையும் -ஏனைய மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது போன்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப்  பார்க்க வேண்டுமேயொழிய – காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக நிவாரணம் வழங்க முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கும் நிவாரணத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த முடியாது. 

இன்று இந்த மக்கள் பாதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் – சிறிலங்கா அரசால் சிதைக்கப்பட்ட அவர்களது வாழ்க்கை நிலைமையாகும். இவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் – இன்றைய பொருளாதார ரீதியான பலவீனத்தைப் பயன்படுத்தி-காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு அங்கீகாரத்தைத் தேடும் கபட முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. 

இந்த நிவாரணத்தை வைத்துக்கொண்டு – தமது யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காக – சிறிலங்கா அரசாங்கம் – இந்த அவலத்திலும் கூட அரசியல்லாபம் தேடவே முற்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டு வறுமை நிலையை எதிர்நோக்கும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு – காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக வழங்கும் நிவாரணத்தினூடாக – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதாக காட்ட முயலும் – மறைமுக நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த அரசாங்கம் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதாகும்.