கடல் எல்லையை பலப்படுத்துகிறது இலங்கை-கொரோனா தொற்றாளர்களின் வருகை!

இந்தியாவில் “கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்கள் எந்த வழிகளிலும் இலங்கைக்கு நுழையாதிருக்க  இலங்கையின் வடக்கு கடல் எல்லையை பலப்படுத்த கடற்படை  நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப்படை மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

இலங்கை கடற்படை  தளபதி ரியால் அட்மிரல் பியல் டி சில்வா  இது குறித்து கூறுகையில்,

 “கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் மோசமான நிலைமையை அடுத்து  இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாலர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் இவ்வாறான நோயாளர்கள் அதிகரிப்பின் விளைவாக கடல் மார்க்கமாக அவர்கள் இலங்கைக்கு தப்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

எனவே இலங்கையின் வடக்கு கடல் எல்லையே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதால் வடக்கு கடல் எல்லை உள்ளிட்ட நாட்டின் சகல பக்கமும் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு அவர்களின் கண்காணிப்பு செயற்பாடுகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் எதுமீரும் எவராக இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட முடியும். கடற்படை அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்றார்.