நீர்கொழும்பில் மீன்பிடி படகை திருடி போதை பொருள் வாங்கச்சென்றோர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடி அதில் களவாடப்பட்ட படகு எஞ்சின் ஒன்றைப் பொருத்தி நீர்கொழும்பு எமில்டன் வாவி ஊடாக கொழும்பு பேலியாகொடை பெரிய பாலம் வரையில் சென்று போதைப் பொருளை வாங்கி வந்த மூன்று நபர்களை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த துங்கல்பிட்டிய பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடியுள்ளனர். அந்தப் படகிற்கு தாங்கள் திருடிய படகு எஞ்சின் ஒன்றைப் பொருத்தியுள்ளனர்.

பின்னர் நீர்கொழும்பு எமில்டன் வாவி வழியாக களனி கங்கைக்குச் சென்று அங்கிருந்து களனி பாலம் அருகில் படகை நிறுத்தி வைத்துவிட்டு மட்டக்குளியிலிருந்து போதைப் பொருளை வாங்கியுள்ளனர். பின்னர் நீர்கொழும்பு பகுதியில் விற்பனைச் செய்வதற்காக படகில் கொண்டு வந்துள்ளனர். இதன்போதே பொலிஸார் சந்தேக நபர்களை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் இருவர் இளைஞர்களாவர். படகைச் செலுத்தியவர் நடுத்தர வயதுடையவராவார்.மூன்று சிறிய பொதிகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் வைக்கப்டடிருந்தது. 15 கிராம் வரையிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.