12 கோடி பிணைத்தொகை கால்பந்து வீரர் ரொனால்டினோ

தென் அமெரிக்க நாடான பராகுவேக்கு கடந்த மார்ச் மாதம் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோவும், அவரது சகோதரா் ராபா்டோவும் சென்றனா். அப்போது கடவுச்சீட்டை சோதனை செய்த அதிகாரிகள் அவா்களை நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனா். எனினும், பின்னா் கடவுச்சீட்டு போலியானது என்பதை கண்டறிந்த அதிகாரிகள், ரொனால்டினோவையும், அவரது சகோதரரையும் தங்கும் விடுதியில் கைது செய்தனா். ‘தன்னை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தவா்கள் கொடுத்த கடவுச்சீட்டைதான் காண்பித்தேன்’ என்று ரொனால்டினோ தெரிவித்தாா். இருவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மார்ச் 6 முதல் சிறையில் இருந்தார்கள்.

 

ரொனால்டினோவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ரொனால்டினோவுக்கு ஜாமீன் அல்லது வீட்டுக் காவலில் வைக்குமாறு எழுப்பிய கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்தாா். அத்துடன், ரொனால்டினோவுக்கு சில அரசு அதிகாரிகளும் உதவியிருப்பது தெரியவந்துள்ளது என்றாா். எனவே இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு ரொனால்டினோவையும், அவரது சகோதரரையும் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாமல் தடுக்க வேண்டியது எனது கடமை என்றும் நீதிபதி தெரிவித்தாா். இதுபோல மூன்று முறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ரொனால்டினோவும் அவருடைய சகோதரரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பராகுவேயின் அசுன்சியான் நகரில் உள்ள நான்கு நட்சத்திர விடுதியில் ரொனால்டினோவும் அவருடைய சகோதரரும் காவலில் வைக்கப்படுவார்கள். இதற்காக 12 கோடியே 15 லட்சம் பிணைத்தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளது.ரொனால்டினோ கடந்த 2018-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.