கொரோனா வைரஸ் தொற்று மோசமாகும் பிரித்தானிய நிலைதொடர்பான -கட்டுரை!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தையொட்டி அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வராமல் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வேலைத்தளங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் அற்ற அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பாவில் ஏனைய நாடுகளைவிட இங்கிலாந்தில் மிகத்தாமதமாகவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரித்தானியா சாதாரணமான இயல்பு நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டது.இப்போது இந்த திடீர் சமூகத் தொடர்புகளின் சகல இயக்கங்களையும் நிறுத்துவதன் நிகழ்ச்சிகளால் சுய தொழில் செய்வோர்கள், கைச்சம்பளத்திற்குப் பணிபுரிவோர், அகதி அந்தஸ்த்துக் கோரி நிற்பவர்கள், சட்ட அந்தஸ்த்து வழங்கப்படாத மக்கள் ஆகியோர் பெரும் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தைப் பேண முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நோயினால் குறைந்தபட்சம் இருபத்;தையாயிரம் மரணங்கள் சம்பவிக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகின்றது. அந்தத்தொகையின்; இரண்டு மடங்காகவும் இந்த மரணத்தொகை அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இதற்கிடையில் கொரோனாவைரஸ் தொற்றி உள்ளதா இல்லையா என்று கண்டறியும் பரிசோதனை முயற்சிகள் இங்கிலாந்தில் மிகப் பின்தங்கியிருக்கிறது. ஒரு நாள் ஒன்றிற்கு பத்தாயிரம் பேர் மட்டும் பரீட்சிக்கப்படத்தக்க வசதிகள் காணப்படுகின்றன. ஜேர்மனியில் இவை பத்துமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் நடின் டூறிஸ் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த கொரோனாவைரஸ் தொற்றுக்கு பரிசோதனை செய்வது என்பது வைரஸ் தாக்கத்திற்கு ஒரு தீர்வு அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நோய்க்கு மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை என்பதும் இந்நோயை அவர் பூரணமாக விளங்கவில்லை என்ற கருத்தும் எழுந்தது.

மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுரை கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குப் பின்னர் பொது இடங்களில் பயணங்கள் செல்வது அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டு மக்களிடம் தங்கள் இருப்பிடங்களிடம் இருக்குமாறு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே சமயத்தில் என். ஏச். எஸ். எனப்படும் பிரிதானியாவின் சுகாதார சேவைவையைச் சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும். தூய்மைப் பணியாளர்களும் இந்நோய்த்தடுப்பில் முன்னணியில் நின்று செயற்படுவதை பிரித்தானிய மக்கள் பாராட்டத் தவறவில்லை 

அறுபத்தைந்து வயதான ஒரு சிங்கள மருத்துவரும். ரக்சி சாரதியாகப் பணிபுரிந்துகொண்டிருந்த தமிழ் குடும்பத்தைச்சேர்ந்த வண்டிச் சாரதியும் கொரோனாவைரஸ் தாக்கத்தின் நோய்க்குள்ளாகி மரணமடைந்துள்ளனர். ஏப்ரல் 13 ஆம் திகதி வரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமா என்பது குறித்து அரசு பின்னர் அறிவிக்குமென்று கருதப்படுகின்றது.

                                                                                                    இக் கட்டுரை தினக்குரலில் இருந்து                                                                                                                 பிரதி செய்யப்பட்டது  நன்றி 

                                                               லண்டனிலிருந்து நவஜோதி ஜோகரட்னம்