வறுமைக்கோட்டிற்குட்பட்ட 170 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 170 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் உலருணவுப் பொதிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட நான்கு கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 170 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, யா/410 கிராமசேகவர் பிரிவில் 45, யா/412 கிராம சேவகர் பிரிவில் 45, யா/408 கிராம சேவகர் பிரிவில் 35, யா/404 கிராமசேவகர் பிரிவில் 35 குடும்பங்கள் மற்றும் 10 பெண்தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவுசெய்யப்பட்ட 170 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கிவைக்கப்பட்ட பொதிகள் ஒவ்வொன்றிலும் தலா ஆயிரம் ரூபா பெறுமதிக்கு, 2kg அரிசி, 2 kg மா, 1.5 kg சீனி, 150 g சோயா மீட்,  500 g உருளைக் கிழங்கு, 500 g வெங்காயம், 2 லைபோஸ் சோப், 50g தேயிலை ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது.
வலிகாமம் மீதான இராணுவ நடவடிக்கையால் 1990 இல் இடம்பெயர்ந்து கடந்த 27 ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து உள்ளக, அயலக இடப்பெயர்வுகளை சந்தித்து அண்மையில் மீள்குடியேறியிருக்கும் மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த புலம்பெயர் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தை சேர்ந்த இளைஞர்களால் இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதது.