5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு!

நாட்டில் மோசமான நிலைமைகள் காணப்பட்டாலும் கூட ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள அரசாங்கம் உயர்தர பரிட்சை, தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை பிற்போட எந்த தீர்மானம் எடுக்கவில்லை எனவும் கூறுகின்றது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இந்த தகவல்களை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் நடுப்பகுதியில் வெளியிடவே தீர்மானம் இருந்தது. எனினும் நாட்டின் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பெறுபேறுகளை வழங்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.எனினும் இப்போது வரையில் சகல வினாத்தாள்களும் பரிசீலனை செய்து முடிந்துள்ளது. ஒருசில வேலைத்திட்டங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.ஆகவே  35 குழுக்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரகால பரிசீலனை செய்யவேண்டியுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகவும்  உள்ளனனர். ஆகவே இந்த நெருக்கடி சூழலிலும் இந்தக் குழுவை வரவழைத்து பிரத்தியேகமாக ஹோட்டல் ஒன்றினை ஏற்பாடு செய்து  தொடர்ச்சியான வினாத்தாள் திருத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.அதேபோல் உயர்தர பரீட்சைகள்  பிற்போடப்படும்  என்ற பொய்யான செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளது. எனினும் கடந்த மற்றும் இந்த ஆண்டுகளில் உயர்தர கல்வியை கற்கும் மாணவர்களுக்கு பாரிய நெருக்கடியாக காலமே நிகழ்ந்தது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மூன்றுமாத காலம் அவர்களால் கல்வியை முறையாக தொடர முடியாத நிலை இருந்தது. இப்போது கொரோனா வைரஸ் காரணமாக அதே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் எந்தவித செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். அதேபோல் உயர்தர பரிட்சைகள் ஒருபோதும் பிட்போடப்படாது.அத்துடன்  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது என்ற பொய்யான  கருத்துக்கள் நிலவுகின்றது. ஆனால் புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது. உரிய காலத்தில் பரிட்சைகளை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அதற்கான சகல அனுமதியையும் வழங்கியுள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.