தனியார் மருந்தகங்களை ஊரடங்கு வேளையில் திறக்க அனுமதி வழங்கவும்!

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் தனியார் மருந்தகங்களைத் திறப்பதற்கான அனுமதியை வழங்குமாறு வட மாகாண ஆளுனர் பி. எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரிடம் உமாச்சந்திரா பிரகாஷ் (ஐக்கிய மக்கள் சக்தி) கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ‘கொவிட் 19’ தாக்கத்தினால் மக்களின் பாதுகாப்புக் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில், மருந்துகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மருந்தகங்களின் விபரங்கள் தொடர்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் தென்மராட்சி பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்ட மருந்தகங்கள் இல்லாத காரணத்தால், நோயாளர்களும் பொது மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மருந்து வகைகளுடன் குழந்தைகளுக்கான பால்மா வகைகளையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அனைவரும் ஒன்லைன் மூலமான மருந்து கொள்வனவு தொடர்பில் சாத்தியமற்ற தன்மை தொடர்பிலும் உமாச்சந்திரா பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆகவே தென்மராட்சி மக்களின் மருத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்கள் சிலவற்றுக்கு, ஊரடங்கு நேரத்தில் மருந்து விற்பனையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நேரத்தில், மருந்துகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மருந்தகங்களின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது