24,000 ஐ நெருங்கும் உயிரிழப்பு… ஒரேநாளில் 2,685 பேர் உயிரிழப்பு!

கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் காரணமாக கடந்த இதுவரை 23,967 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 2,685 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவின் புதிய மையமாக உருவெடுத்துள்ள இத்தாலியில் 712 பேரும், ஸ்பெயினில் 718 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 8,215 ஆகவும், ஸ்பெயினின் மொத்த உயிரிழப்பு 4,365 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்ப்படி, அமெரிக்காவிலேயே அதிகளவான மக்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். தற்போது 82,400 பேர் வைரஸ் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். சீனாவில் 81,700 க்கும் மேற்பட்டவர்கள், இத்தாலியில் 80,500, ஸ்பெயின் 57,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,உலகளவில் 123,366 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 529,057 பேர் உலகளவில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஜி 20 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கென்பிரன்ஸ் மூலம் நடத்திய கலந்துரையாடலில், கொரோனாவை கட்டுப்படுத்த “எதை வேண்டுமானாலும் செய்ய“ உத்தரவாதமளித்து, உலகளவில் பொருளாதாரத்தை பாதுகாக்க 5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் நிதியளிக்க உத்தரவாதமளித்தனர்.
இதேவேளை, வடக்கு ஐரோப்பாவை தளமாகக் கொண்ட ஒரு புதிய நாஜி இயக்கமான- என்ஆர்எம் தலைவர், கொரோனா வைரஸை வரவேற்றுள்ளார். தனது குழு பார்க்க விரும்பும் உலகை உருவாக்க உதவுவதற்கு தேவையான ஒரு நடவடிக்கையாக அவர் தொற்றுநோயை வரவேற்றுள்ளார்.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 365 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதில் 16 வயது சிறுமியும் அடக்கம்.
பிரான்சில் இதுவரை 29,155 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாகவும், அதிக ஆபத்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் நாட்டின் சுகாதாரத்துறை உயரதிகாரி ஜெரோம் சொலமன் கூறினார்.
கென்யாவில் முதலாவது கொரோனா வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மரணமானவர் பற்றிய விபரத்தை அரசாங்க செய்தித் தொடர்பாளர் சைரஸ் ஒகுனா விபரமாக தெரிவிக்கவில்லை. நேற்று மேலும் மூவர் தொற்றிற்குள்ளானார்கள். தற்போது அங்கு 31 தொற்றாளர்கள் உள்ளனர். நாடு முழுமையான பூட்டுதலை நெருங்குவதாக தெரிவித்துள்ள அரசாங்கம், மக்களை சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்தியுள்ளது.
இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 157, அமெரிக்கா 174, இங்கிலாந்து 115, ஜேர்மனி 61, பெல்ஜியம் 42 உயிரிழப்புக்களை பதிவு செய்துள்ளன.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினிற்கு உதவ 11 மில்லியன் யூரோக்களை திரட்டும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ள ஸ்பெயினின் ரென்னிஸ் நட்சத்திரம் ரபேஸ் நடால், அதற்கு உதவும்படி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தென் கொரியாவில் 97 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். போஹாங் மருத்துவ மையத்தில் இரண்டு வார சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். மீண்டும் தொற்றுநோயில் அவர் பாதிக்கப்படாமலிருக்க, வீட்டில் சுய தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவ மையத்தில் முன்னர் 104 வயதான பெண்ணொருவரும் கொரோனாவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.