கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வலி.மேற்கில் சந்தைகள் விஸ்தரிப்பு -வியாபாரிகளும் பொதுமக்களும் மாஸ்க் அணிவது கட்டாயம்-

வலி. மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகளை அமைத்து மக்களுக்கு பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று (26) வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வரும் மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வியாபாரிகளும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வியாபாரிகள் மிக அருகாமையில் இருப்பதை தவிர்த்து ஆங்காங்கே தூரமாக இருந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இந்த நடைமுறைகளை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது சங்கானை நகரில் உள்ள பொதுச் சந்தையில் மக்கள் கூட்டமாக அலைமோதுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரங்களில் மக்களுக்கு பிரதேச வாரியாக மரக்கறிகள் மற்றும் பொருட்கள் கிடைப்பதை இலகுபடுத்துவதற்காகவும் இந்த தற்காலிக சந்தைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சங்கானையில், சங்கானை உப அலுவலகம் முன் உள்ள டச்சு கோட்டை, .கூடத்து மனோன்மணி அம்மன் கோயில் மேற்குபுற மைதானம், சிலம்புப்பளியடி பிள்ளையார் கோயில் வீதி, சங்கானை நிகரவைரவர் கோயில் வீதி, சலேசியார் கோயில் வீதி,

சுழிபுரம் – சத்தியக்காட்டு சந்தை, தொல்புரம் மத்திய சந்தை, பனிப்புலம் சந்தை, மூளாய் முன்கோடை பனையடி சந்தை.

அராலி – அராலி செட்டியார்மட சந்தை, அராலி உப அலுவலகம் முன்பாகவுள்ள கருப்பட்டி பிள்ளையார் கோயில் பின் வீதி,

வட்டுக்கோட்டை – வட்டுக்கோட்டை பொதுச்சந்தை, சங்கரத்தை பொதுச்சந்தை

இந்த சந்தைகளில் பொதுமக்களுக்கு தேவையான மரக்கறிகள் விற்பனை செய்ய முடியும் என முடிவெடுக்கப்பட்டது.