ஜனாதிபதியின் உத்தரவை மீறிய சமூர்த்தி வங்கி! ஏழை மக்களிடம் கடன் அறவீடு!!

ஜனாதிபதியின் உத்தரவை மீறி கடன் அறவீடு செய்த சமூர்த்தி வங்கியால் பொதுமக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருதயபுரம் சமூர்த்தி வங்கியில் சமுர்த்தி கொடுப்பனவை பெறச் சென்ற குடும்பங்களிடம் இருந்து கடன்களை அறவீடு செய்து சேமிப்பு புத்தகத்தில் பதிவு செய்து அனுப்பியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோணா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கை பூராவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன் தொகைக்கான மாதாந்த அறவீடுகளை ஆறுமாதம் கழித்து அறவீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வட்டி அற்ற பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்நிலையில் சமுர்த்தி வங்கி கொடுப்பனவை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற பல ஏழை குடும்பங்களிடம் இருந்து மட்டக்களப்பு இருதயபுரம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் கடன் அறவீடு செய்தமை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூர்த்தி வங்கியில் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை பெற சென்ற போது தங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தில் இருந்து கடன்களை அறவீடு செய்து அதனை சேமிப்பு புத்தகத்தில் வைப்பில் இட்டு மீதி பணத்தையே அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதனால் ஜனாதிபதியின் கதையை கேட்டு சென்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிடம் இருந்து கடந்த காலங்களில் சேமிப்பு பணங்களை அறவீடு செய்தனர் இதில் அதி கூடிய தொகை பணத்தை சேமிப்பு பணமாக மட்டக்களப்பு சமூர்த்தி திணைக்களம் வைப்பில் வைத்துள்ளதாக கூப்படும் நிலையில். இவ்வாறான அவசர கால நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாது தொழில்களை இழந்து நிற்கும் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அந்த மக்களுக்கு இந்த பணம் பயன்படவில்லை என்றால் வேறு எப்போது இந்த சமூர்த்தி சேமிப்பு பணம் பொதுமக்களுக்கு பயன் படப்போகிறது?

ஜனாதிபதியின் உத்தரவை மீறி சமூர்த்தி உதவி பெறும் ஏழை மக்களின் உதவி தொகையில் இருந்து கடன் அறவீடு செய்வதாக கூறி அந்த பணத்தை சேமிப்பு கணக்கில் வைப்பில் இட்டுள்ளனர்.

சமூர்த்தி வங்கி உத்தியோகத்தரின் பதில்!

ஆனால் இது குறித்து சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர் ஒருவர் கூறும் போது மேற்படி செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும்.

இன்று இருதயபுரம் சமூர்த்தி வங்கியில் எந்த வித கடனும் அறவீடு செய்யவில்லை என்றும் பயனாளிகளின் மீதி பணங்கள் அவர்களது கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரும்பிய நேரத்தில் அவர்கள் அவர்களது பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதைவிட தங்களது வங்கிக்கு இதுகுறித்த சுற்றுநிருபம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் கடன் கட்டாததற்கான மேலதிக தண்டப்பணம் மட்டுமே அறவீடு செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகவும். இருந்தும் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் யாரிடமும் கடன் அறவீடு செய்யவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்