உள்நாட்டு பயணங்களையும் தடைவிதித்தது இத்தாலி!

இத்தாலியில் அதிகரித்த உயிரிழப்பை தொடர்ந்து, மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, குடிமக்கள் உள்நாட்டுக்குள் மேற்கொள்ளும் சகலவிதமான பயணத்தையும் தடைவிதித்துள்ளது.
நேற்று இத்தாலியில் 651 உயிரிழப்புகள் பதிவாகின. இதன் மூலம் மொத்த உயரிழப்பு 5,476 ஆக உயர்ந்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி, கார், ஆடை மற்றும் தளபாடங்கள் தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரண முயற்சிகளின் தலைவரான டொமினிகோ அர்குரி, இத்தாலி வைரஸுடன் “போரில்” இருப்பதாக கூறினார்.
“அனைத்து போர்களும் இரண்டு வழிகளில் வெல்லப்படுகின்றன. சொந்த இராணுவம் மற்றும் நண்பர்களின் உதவியுடன்” என்று அவர் கூறினார்.
இதேவேளை, ஏனைய நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு வலியுறுத்துகின்றன.
கொரோனாவினால் ஐரோப்பாவில் இரண்டாவது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயின், நாட்டின் அவசரநிலையை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. அங்கு 1,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது உலகப் போரின் பின்னர், பெரியளவிலான, ஒருங்கிணைந்த பொது கட்டுப்படுத்தல் திட்டத்தை தொடங்க ஸ்பெயின் பிரதமர் ஐரோப்பாவிடம் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, கொரோனா பாதிப்பினால் உலகளவில், இப்போது 14,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 336,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 98,000 பேர் குணமடைந்துள்ளனர் என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது ஒரு ‘விருப்பமாக’ மாறக்கூடும் என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கை “முழுமையான வடிவத்தை” நடத்துவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் மேலும் 36 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.