உலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்!

உலகளவில் 85 கோடி மக்களுக்கு பற்பல காரணங்களால் சிறுநீரக நோய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 24 இலட்சம் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. இறப்புக்கான ஆறாவது மிகப் பெரிய காரணமாக சிறுநீரக நோய்கள் உள்ளன.

வயது வந்தோரில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பு 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் சிறுநீரக நோய்களின் தாக்கமும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் வாங்கும் மருந்துகள், சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொற்றல்லாத நோய்களின் (நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம்) தாக்கம் போன்றன உடலுக்கு பாதிப்புகளை அதிகரிப்பதுடன் சிறுநீரக நோய்களையும் உருவாக்குகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய்கள் உருவாக்கும் ஆபத்து ஆண்களைப் போலவே பெண்களிடமும் அதிகமாக உள்ளன.

திடீர் எடை அதிகரிப்பு, இரத்த சோகை, பலவீனம், சோர்வு, தொடர் சிறுநீர்த் தொற்று போன்றவை குழந்தைகளுக்கான சிறுநீரக நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் எனக் கூறும் மருத்துவர்கள், அதைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் பெற்றோருடையது எனவும் அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சியின்மை, துரித உணவு, குறைந்த அளவு நீர் பருகுதல் போன்றவை குழந்தைகளின் சிறுநீரகங்களைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

​ேஜான்ஸ் ​ேஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் அண்மைக்கால ஆய்வுகள் 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகின்றன. வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையில் வயதானவர்களைப் பாதிக்கும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்துக் காரணிகளாக இருக்கின்றன. சில மேலைநாடுகள் சிறுநீரகத்தில் புரதத்தின் அளவை அறியும் அல்புமின் சோதனையை வயதானவர்களுக்குப் பரிந்துரைக்கின்றன. இந்தச் சோதனை மூலம் சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகள். சிறுநீரக பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகள் எதுவுமின்றி அல்லது சில அறிகுறிகளுடன் தீடீரென உருவாகின்றன. நோய் பாதிக்கும் வரை தங்களிடம் அந்நோய் இருப்பதாக இந்த நோயாளிகளால் உணர முடிவதில்லை. மூச்சுத் திணறல், உடல் சோர்வு, நீர்க்கட்டு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கும் போது, ஒருவரின் சிறுநீரகச் செயல்பாடு 25 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக குறைந்து விட்டது என்று அர்த்தம்.

இந்த முக்கிய உறுப்பின் செயலிழப்பைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதும், குறைந்த உப்புடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுமாகும். சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வுதான் சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முதல் படியாகும்.

தாமதமாக சிறுநீரக நோய் குறித்து அறிதல் நோயாளிகள் மருத்துவச் செலவு செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. இதனால் பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது ஓர் ஆய்வு தெரிவிக்கும் உண்மை. அதிக உப்பில்லாத உணவு, தொடர் உடற்பயிற்சி, உடல் பரிசோதனை முதலான வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே, சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தற்போதைய தேவையாகும்.