தன்னார்வ இளைஞர்களுக்கு மருத்துவர் சத்தியமூர்த்தி கொரோனா விளக்க பயிற்சி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களிடம் சென்று விழிப்புணர்வு செயற்பாட்டில் தன்னார்வமாக ஈடுபட முன்வந்த தமிழ் இளைஞர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பெரும் அவலத்தையும் நெருக்கடி நிலையையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உன்னத நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

தன்னார்வமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்த இளையவர்களை பாராட்டியதுடன் கொரோனா தொடர்பான விளக்க பயிற்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார்.

அதனடிப்படையில், இன்று வியாழக்கிழமை நண்பகல் 11.30 தொடக்கம் 1.30 வரை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டிருந்து. யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பகுதியில் உள்ள கலந்துரையாடல் அரங்கில் நடைபெற்ற இவ் விளக்கப் பயிற்சி நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றுப் பிரிவின் ஆலோசகர் மருத்துவர் ஆர்.கஜந்தன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கியிருந்தார்கள்.

தன்னார்வ இளைஞர்கள் எழுப்பிய கொரோனா தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள் என்பவற்றிற்கு சரியான விளக்கங்களை வழங்கியதுடன் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையின் போது பொதுமக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும் கொரோனா தொடர்பான அறிகுறியுடையவர்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனைகள் குறித்தும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இவ்விளக்க பயிற்சி நிகழ்விற்கு, வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டில் ஈடுபாடுடைய இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சுமார் அறுபதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.