ஜூனியர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த பங்களாதேஷ்

முதல் முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது பங்களாதேஷ்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13 வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்டரூமில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் ஜெய்ஸ்வால் – சக்சேனா ஜோடி, வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இந்திய அணி முதல் 5 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில், வங்கதேச பந்துவீச்சாளர் அவிஷேக் தாஸிடம் தன்னுடைய வீக்கெட்டை பறிக்கொடுத்தார் சக்சேனா.

2 வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதனாமாக விளையாடி, 25 ஒவர்களில் 1 விக்கெட்டை இழந்து 80 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுத்தது ஜெய்ஸ்வால்- திலக் வர்மா ஜோடி. இந்தியா அணியின் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 89 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் இது அவருக்கு 4வது அரை சதமாகும். இந்திய அணி 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 65 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இந்திய அணியின் கேப்டன் பிரிமர் கார்க் 7 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

40 வது ஓவரில் 121 பந்தில் 88 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் வீர் ரன் ஏதும் எடுக்காமல் LBW ஆனார். அப்போது இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து மளமளவென சரிய ஆரம்பித்தது. இந்தியா 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. வங்கதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் எமோன் – தன்சீத் ஹசன் ஜோடி வங்கதேச அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தது. 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் தன்சீத் ஹசன். அடுத்தடுத்து வந்த ஹசன் ஜாய், தவ்கித், ஷகாதத் ஹொசைன் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்களை இழந்ததால் வங்கதேச அணி திணறியது. மறுபுறம் நிதனமாக விளையாடிய பர்வேஸ் ஹொசைன் 79 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இச்சூழலில், களத்திற்கு வந்த வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி பெறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 10 ஒவர்கள் வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய தரப்பில் சுஷந்த் மிஸ்ரா 2 விக்கெட்களை எடுத்தார்.

178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேசம் 41 ஓவரில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது வங்கதேச அணியின் வெற்றிக்கு 46 ஓவரில் 170 ரன்கள் எடுக்கவேண்டும் என டக்வொர்த் லூயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் மீண்டும் விளையாடியது. ஆட்டம் தொடங்கியதும் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து, வங்கதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது வங்கதேசம். வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி 43 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக U19 ஜூனியர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேசம்.