படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்….!

புத்தளம் கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் பயணித்த வள்ளம்
நீரில் மூழ்கியதில் குறித்த மீனவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டுக்கச்சிய 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த என்டன் மைக்கல் பெரேரா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 வருடத்திற்கும் மேலாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் உயிரிழந்த குறித்த மீனவர், கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்தில் 20 வருடங்களாக மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ தினத்தன்று குறித்த மீனவர் மீன்பிடிப்பதற்காக வள்ளத்தில் சென்று வலைகளை போட்டு, மீண்டும் அந்த வலைகளை எடுக்க முயற்சி செய்த போதே வள்ளம் கவிழ்ந்ததில் அந்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.
இவ்வாறு உயிரிழந்த மீனவரின் சடலம் குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.