பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் வருகைக்கு எதிப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் …!

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் ‘போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். இது தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.
அத்துடன் அவர்கள் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது இன்றுடன் 1027 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.