கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளரின் மாமா ஐ.தே.க நாடாளுமன்ற வேட்பாளர்! திசை திரும்பும் விசாரணை…!

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிறிலதாவை இன்று  (12) சிஐடியில் முன்னிலையாகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பயணத்தடை கோரி சிஐடியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில், இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த 25ம் திகதி சுவிஸ் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 27ம் திகதி சுவிஸ் தூதர், இலங்கை அரசிடம் முறையிட்டிருந்தார்.
கடந்த 8,9,10ம் திகதிகளில் சுவிஸ் பணியாளரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளரின் கணவனின் தந்தையான பெவன் பெரேரா கடந்த 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அவர் முன்னர் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறார். சு.கவிலிருந்து அநுர பண்டாரநாயக்க வெளியேறியபோது, அவருடன் வெளியேறிய பெவன் பெரேரா ஐதேகவில் இணைந்து செயற்பட்டுள்ளார்.
இதேவேளை, கடத்தல் தொடர்பாக சுவிஸ் தூதர் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு மாறானது என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும், சுவிஸ் பணியாளரின் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.