நாட்டில் மீண்டுமொரு குழப்பகர சூழலை உருவாக்கும் முயற்சிகள்

ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம் என்கின்றனர் அஸ்கிரிய மல்வத்து பீடங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சர்வதேச சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது தெளிவாக தெரிவதாவும் ஆகவே  நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தும் அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் அதனாலேயே  ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் இரண்டு அரசுகள் உருவாக்கப்பட்டால் மட்டுமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்ததாக கூறப்படும் காரணியில் இலங்கை அரசாங்கம் அதன் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அஸ்கிரிய பீடாதிபதி தேரரான மெதகம தம்மானந்த தேரேர் தெரிவிக்கையில்,  அண்மைக் காலங்களாகவே சில சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இலங்கையின் சுயாதீனம், கொள்கை மற்றும் பௌதீக தன்மைகளை பலவீனப்படுத்தும் வகையிலான காரணிகளை முன்வைத்து வருகின்றனர். தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ள அரசியல் மாற்றம் கூட இந்த நாடுகளுக்கு பிடிக்கவில்லை என்பதும் தெளிவாக தெரிகின்றது. அவர்களுக்கு விரோதமான அரசாங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாகவே அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் எமது நாட்டினை இரண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் இந்த நாட்டில் யுத்த சூழல் ஒன்றினை உருவாக்கும் நோக்கத்தில் மேற்குலக சக்திகள்  செயற்பட ஆரம்பித்துள்ளது என கூறியுள்ளார்.

இது குறித்து மல்வத்துபீட அனுநாயக தேரர் நியன்கொட விஜிதசிறிதேரர் கூறுகையில், பிரித்தானிய பழைமைவாதி கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரண்டு அரசுகள் என்ற கொள்கையை உள்வாங்கியுள்ளனர். எனினும் இன்றுவரையில் இலங்கையில் சகல இனமத மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்ற இந்நிலையில் இவ்வாறான கருத்தினை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். இது மீண்டும் நாட்டுக்குள் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் காரணியாக அமையும். பிரித்தானியா இலங்கையை ஆக்கிரமித்து ஆட்சிசெய்து பின்னர் இலங்கைக்கென்ற சுயாதீன இராச்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பெளத்த சிங்கள ஒருமைப்பாட்டில் ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை நாசமாக்கும் வகையில் மேற்கு நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என்றார்.