க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுதாராதர சாதாரண தர பரீட்சைகள்  இன்று ஆரம்பமாகி  எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இம்முறை நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 3958 தனியார் பரீட்சாத்திகளாவர்.

பரீட்சைகளை நடத்துவதற்காக 4, 987 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, 541 ஒருங்கிணைப்பு நிலையங்களும் நிருவப்பட்டுள்ளன.  இவற்றில் 8 விஷேட பரீட்சை நிலையங்களாகக் காணப்படுகின்றன.

சிறை தண்டனை அனுபவித்து வரும் சந்தேகநபர்கள் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்காக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பரீட்சாத்திகளுக்காக மஹரகம வைத்தியசாலையில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

சார்க் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள விளையாட்டு வீரர்களுக்காக நேபாளத்தின் காத்மன்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தில் விஷேட பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் ஹோமாகம சுனீத வித்தியாலயம், இரத்மலானை அந்த வித்தியாலயம், தங்கல்ல , ஹலாவத்தை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களிலும் விஷேட பரீட்சை நிலையங்கள்  நிறுவப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மாத்திரமே பரீட்சை நிலையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தொலைபேசி , கணிப்பான் போன்ற இலத்திரனியல் சாதனங்கள் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.