மு. கல்விளான்குளம் ம.வி இல் மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு -புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி.!

முல்லைத்தீவு – கல்விளான்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் விழா கடந்த வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மேலும், துணுக்காய் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர், வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன், அயற் பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதேசமட்ட அமைப்புக்களின் பிரநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த மாணவனுக்கு வெண்கரம் அமைப்பினால் புதிய துவிச்சக்கரவண்டிய வழங்கப்பட்டது.

100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பல வருடங்களுக்கு பின்னர் ஒரு மாணவனைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவைத்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வெண்கரம் அமைப்பினால் பாராட்டப்பட்டனர். அதிபருக்கு பாராட்டு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு சித்தியடைந்த மாணவனுக்கு வழங்குவதற்கான துவிச்சக்கரவண்டியை டென்மார்க் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான தருமன் தருமகுலசிங்கம் வழங்கினார்.

வெண்கரம் செயற்பாட்டாளர் திருமதி க.சிவரஞ்சினி, எஸ்.யசோதரன் ஆகியோர் இந்தச் செயற்பாட்டுக்கான ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.