ஜப்பான் பிரதமர் உலகத்தின் ஒரே ஒரு முட்டாள்: வடகொரியா கடும் விமர்சனம்!

ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.

வடகொரியா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இது கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சே சர்வதேச மற்றும் ஜப்பானுக்கான அச்சுறுத்தல் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு எச்சரிக்கை விடுத்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதில், ‘ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இந்த உலகத்தின் ஒரே ஒரு முட்டாள். அபே உண்மையான ஏவுகணை சோதனையை பற்றி அறியாமல் இருக்கிறார். எதிர்காலத்தில் இதனை பற்றி அறிவார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.