இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்

இந்திய ராஷ்ட்ரபதி பவனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் உத்தியோகப்பூரவ விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டியிருப்பதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இதன் போது தெரிவித்துள்ளார்.

மேலும், இது நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்தை வலுவூட்டும் என்றும் இந்திய ஜனாதிபதி கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் எதிர்காலத்திற்காக வகுத்துள்ள கொள்கைப் பிரகடனம் அந்நாட்டின் அனைத்து பிரிவுகளையும் துரிதமாக மேம்படுத்துமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டுவதன் மூலம் வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்த முடியும் என்பதோடு, இரு நாட்டு மக்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.