சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியின் 20 ஆவது பிரிவுபசார விழா!

பருத்தித்துறை வியாபாரிமூலையில் இயங்கிவரும் மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியின் 20 ஆவது பிரிவுபசார விழா நேற்று முன் தினம் புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராசலிங்கம் ராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் பிரிவுபசார விழாவின் போது, மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியில் கல்விச் செயற்பாட்டை நிறைவு செய்து பாடசாலை கல்விச் செயற்பாட்டில் காலடியெடுத்து வைக்கவுள்ள 9 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த கல்வி ஆண்டில் கூடிய நாட்கள் வருகை தந்து கற்றல் செயற்பாடுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கான பரிசில்களை மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க தலைவர் சு.றசியசிங்கம் அன்பளிப்பு செய்திருந்தார்.

தமக்கு சிறந்த ஆரம்பக்கல்வியை ஊட்டிய தலைமை ஆசிரியை ராசலிங்கம் ராணி மற்றும் ரஜேந்திரபிரசாத் மேரிகொலஸ்ரிகா ஆசிரியை ஆகியோருக்கு மாணவர்கள் சார்பில் அன்புப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை வியாபாரிமூலை பகுதியில் வசித்துவந்த மயிலிட்டித்துறை மற்றும் காங்கேசந்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டை ஊக்குவிக்கு வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடாத்தப்பட்டுவரும் மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க இலவச முன்பள்ளியானது ஒவ்வோராண்டும் பல மாணவர்களை கற்பித்து பாடசாலை கல்வியைத் தொடரும் வகையில் வெளியேற்றி வருகின்றது.

மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் வருவாய் மூலமே ஆசிரியர்களுக்கான குறிப்பிட்டதொகை ஊக்குவிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட முன்பள்ளி செயற்பாட்டிற்கான செலவுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.