ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது கரவெட்டி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம்….!

கரவெட்டி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இன்று எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது.
இன்றைய அமர்வின்போது, தவிசாளர் த.ஐங்கரனால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இதன்போது சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐ.தே.க உறுப்பினர்கள் 21 பேர் சமூகமளித்திருந்தனர்.
எனினும் ஈ.பி.டி.பி, மற்றும் சு.க உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.
இந்நிலையில் சமூகமளித்த 21 உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
15 கோடி 60 இலட்சம் ரூபா எதிர்பார்க்கப்படும் வருமானாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டத்தில் வீதி அமைப்பிற்கு 2 கோடி ரூபாவும், வீதி அபிவிருத்திக்கு 3.5 கோடி ரூபாவும், வீதி பராமரிப்பு வாகனங்கள் கொள்வனவு செய்ய 4 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.