கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி வெள்ளைவேனில் கடத்தல் -உடனடி விசாரணை கோரியது சுவிஸ் அரசு!!

கொழும்பிலுள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் விசா அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தக் கோரியுள்ளது சுவிற்சலாந்து அரசு.
கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாகவும் அவரிடம் பல விடயங்களை விசாரித்த கடத்தல்காரர்கள் இறுதியில் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அத்துடன் அந்த அதிகாரியின் கைத்தொலைபேசியும் பறிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சுவிற்சலாந்தில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் கடத்தல்காரர்கள் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.
இன்று வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் இந்த விவகாரம் குறித்து பிரஸ்தாபித்துள்ளார். அதேசமயம் சுவிஸில் உள்ள இலங்கைத் தூதுவரை அந்நாட்டு அரசு பேர்னில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அ
அழைத்துள்ளது .
“ இலங்கை இந்த விவகாரம் குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும் ..” என சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Pierre-Alain Eltschinger தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் சம்பவத்தால் இலங்கை அரசுக்கும் சுவிற்சலாந்து அரசுக்குமிடையில் இராஜதந்திர ரீதியில் முரண்பாடுகள் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.